திண்டுக்கல்லில் உள்ள காந்தி மார்க்கெட்டில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் காய்கறி கடைகள் விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டிடம் ஒன்று வியாபாரிகளின் நலனுக்காக கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதையடுத்து வியாபாரிகள் பலரும் காந்தி மார்க்கெட் பகுதி அருகே சாலை ஓரத்தில் கடைகள் வைத்து அதன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 24-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டதால் காந்தி மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.
இதையடுத்து நேற்று முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் காய்கறி, மளிகை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு வாரங்களுக்கு பிறகு காந்தி மார்க்கெட் பகுதியில் மீண்டும் வியாபாரிகள் சாலை ஓரத்தில் கடைகள் அமைத்து அதன் மூலம் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் அந்த கடைகளுக்கு சென்று காய்கறிகளை வாங்கியுள்ளனர்.