லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ ஈசாந்திமங்கலம் பகுதியில் ஆட்டோ டிரைவர் குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் புளியங்குளம் பகுதியை சேர்ந்த சுபாஷ், வடமாநில வாலிபர் சஞ்சய் ஆகிய 3 பேரும் சேர்ந்து மார்பிள் லோடு எடுப்பதற்காக ஆட்டோவில் நாவல்காடு பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஈசாந்திமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சுடலைமாடன் கோவில் அருகில் 3 பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென ஆட்டோ மீது மோதியது. இதனால் ஆட்டோ நொறுங்கி உள்ளே இருந்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் குமரனும், சுபாசும் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் படுகாயமடைந்த சஞ்சய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று குமரன், சுபாஷ் ஆகியோரின் சடலத்தை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பூதப்பாண்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.