இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கான செலவு அனைத்தையும் மத்திய அரசே ஏற்கும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும். தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25% செலவையும் மத்திய அரசே ஏற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜூன் 21-ஆம் தேதி முதல் தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில் அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை என்பதை மாநிலங்கள் முடிவெடுக்கலாம். தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்தால் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.