பாகிஸ்தானில் விரைவு ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 63 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலானது, சர்கோதாவிற்கு, கராச்சியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தடம்புரண்டதில், எதிரில் வந்து கொண்டிருந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியதில் இக்கொடூர விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதில் பிறந்த குழந்தை மற்றும் 81 வயது மூதாட்டி உட்பட சுமார் 63 நபர்கள் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் 51 நபர்களின் பெயர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பேரின் அடையாளம் தற்போது வரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ரயில்நிலையத்தின் அதிகாரியான கான் முகமது என்பவர் கூறுகையில், விபத்துக்குள்ளான சில நேரங்களில் மில்லட் ரயில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் மேலும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். விபத்திற்கு பிறகு 7 வயதுடைய சிறுமி எஞ்சினுக்கு அடியில் மாட்டிக்கொண்டார். அவரது முழங்கால் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டது.
அச்சிறுமியை உயிருடன் மீட்டுவிட்டோம். மில்லட் ரயில் தடம் புரண்டபோது, சர் சையத் எக்ஸ்பிரஸ் வருவதற்கு சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டிருந்தால், இந்த விபத்து நடந்திருக்காது என்று தெரிவித்திருக்கிறார்.