சட்ட விரோதமாக மினி லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் தக்காளி முட்டைகளுக்கு கீழே அதிக அளவில் அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அதில் ஒரு பெட்டியை மட்டும் பிரித்து பார்த்த போது கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்ததுள்ளது.
இதனை அடுத்து அந்த மினி லாரியில் மொத்தமாக 35 பெட்டிகளில் 1,650 மதுபாட்டில்கள் கடத்தி சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை பெங்களூரில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சரத், சரவணன், விஜய் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த மினி லாரி மற்றும் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.