ஏற்கனவே திருமணமானவர் மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் ஸ்ரீபால் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி ஸ்ரீபாலை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் இவரது வீட்டின் அருகே 28 வயதான மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கும், ஸ்ரீபாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை ஸ்ரீபால் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த மாற்றுத்திறனாளி பெண் ஸ்ரீபாலை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஸ்ரீ பால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாற்று திறனாளி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் உடனடியாக சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீபாலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.