கரடி ஒன்று மரத்தின் மீது ஏறி விளையாடிய காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்ட மரத்தின் மீது கரடி ஏறி விளையாடிக் கொண்டிருந்ததை அப்பகுதியில் சென்ற சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த கரடி மரத்தில் ஏறி சிறிது நேரம் விளையாடிய பிறகு தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, மூணுரோடு, கேஷலாடா, கேத்தரின் நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இந்த கரடிகள் தொழிலாளர்களுக்கு தொந்தரவு அளிக்காமல் அப்பகுதியில் நடமாடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.