நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சிலர் தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அச்சப்படுகிறார்கள். இதுபோன்ற சூழலில் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக வங்கிகள் தரப்பில் இருந்து புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போட்டவர்கள் அனைவருக்கும் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை யூகோ வங்கி வெளியிட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 30 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி தருவதாக அறிவித்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 999 நாட்கள் கால வரம்பில் சிறப்பு வட்டி வழங்கப்படும். இந்த வட்டி சலுகை குறிப்பிட்ட காலம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் UCOVAXI-999 என்ற பெயரில் இந்த திட்டத்தினை யூகோ வங்கி தொடங்கியுள்ளது.
செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரையில் இது செயல்பாட்டில் இருக்கும் என்று கூறியுள்ளது. இந்த வங்கிக்கு முன்னரே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பாக, immune india deposit scheme என்ற பெயரில் 25 அடிப்படைப் புள்ளிகள் கூடுதல் வட்டி வழங்கும் என்று சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான முதிர்வு காலம் 1,111 நாட்கள். அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் இன்னும் கூடுதல் வட்டி கிடைக்கும். அதனால் இந்த அறிய வாய்ப்பை யாரும் தவற விட வேண்டாம்.