Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் தடுப்பூசி திட்டம்…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தும் வகையில் 75% தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசி திட்டத்துக்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தடுப்பூசிகள் தேசிய தடுப்பூசி திட்டத்தில் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் முன்னுரிமை பயனாளர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

மக்கள் தொகை, தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளின் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசி டோஸ்கள் வீணடிக்கப்பட்டால் ஒதுக்கீடு குறைக்கப்படும்.தடுப்பூசி மையங்களில் முன்பதிவு செய்த உடனே தடுப்பூசி போடும் வசதியை செயல்படுத்த வேண்டும். பணம் செலுத்த வசதி உள்ளவர்களை தனியார் மருத்துவமனையில் போட ஊக்குவிக்க வேண்டும். உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக 25% தடுப்பூசிகளை வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தனியார் தடுப்பூசி மையங்களில் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரானிக் வவுச்சர்களை பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும். தடுப்பூசிகளை சமமாக விநியோகிப்பதை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைகளின் கோரிக்கையை ஒருங்கிணைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிக்கான விலையை தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அறிவிக்க வேண்டும். இடையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மக்கள் முன்பதிவு செய்வதற்கு மாநிலங்கள் பொதுவான சேவை மையங்கள் மட்டும் அழைப்பு மையங்களை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |