கன்னியாகுமரியில் மருந்துகள் இருப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்புசி செலுத்தும் பணி நடைபெற்று 25 ஆயிரத்து 122 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசிகளும், 1 லட்சத்து 82 ஆயிரத்து 787 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்திற்கு வந்த ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் நாகர்கோவில் கல்லூரி சிறப்பு முகாமில் வைத்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. அப்போது 18 வயது மேற்பட்டவர்களுக்கும், இரண்டாவது டோஸ் தேவைப்படுபவர்களுக்கும் டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து தடுப்பூசி இருப்பு குறைந்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். எனவே தடுப்பூசி இருப்பு தீர்ந்து போனதால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறியபோது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசி அனுப்பி வைப்பதற்கு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கின்றது. ஆதலால் தடுப்பூசிகள் வந்ததும் உடனடியாக பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்றும் அதுவரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.