இந்தியா ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சியை மேம்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஐ.நா. அமைப்பின் இதயமாக கருதப்படும் 54 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் ஐ.நா. சபை சார்பில் நடைபெறும் இதர மாநாடுகள் மற்றும் உச்சி மாநாடுகளில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை செயல்படுத்துவதிலும் பெரும் பங்காற்றி வருகிறது.
இந்நிலையில் வருகின்ற 2022 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்காக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தேர்தலில் இந்தியா, ஆசிய பசிபிக் நாடுகளின் பிரிவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே பிரிவில் ஆப்கானிஸ்தான், ஓமன், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா.விற்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு இந்தியாவை தேர்வு செய்ததற்காக தனது சார்பில் நன்றியை கூறியுள்ளார்.