மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சிட்லபாக்கம் பகுதியில் சசிகலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சனா என்ற 7-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் கனத்த மழை பெய்ததால் சசிகலாவின் வீட்டு மேற்புறத்தில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் மின்கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி சஞ்சனா மாடிக்கு சென்று எதிர்பாராத விதமாக மின் கம்பியின் குழாயை தொட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு சுய நினைவு இல்லாமல் சிறுமி அங்கேயே மயங்கி கிடந்துள்ளார்.
அதன்பின் மாடியிலிருந்து சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது தம்பி சித்தரஞ்சன் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுவன் தனது அக்காள் மயங்கி கிடப்பதை கண்டு அலறி சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் சஞ்சனா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிட்லபாக்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.