அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருச்சுனை விலக்கு பகுதியில் உள்ள நான்கு வழி சாலையோரமாக 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற வாகனம் ஓன்று அந்தப் பெண் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
உடனடியாக அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டுனரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.