திருப்பத்தூரில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்த மருத்துவ நோய் தடுப்பு மையம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து சித்த மருத்துவ தடுப்பு மையம் வருகின்ற 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை கோட்டை தெருவில் நகராட்சிப் பள்ளியில் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 14-ஆம் தேதி முதல் 16-ம் தேதி வரை சி. கே. சி நகராட்சிப் பள்ளியிலும், 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை சித்த மருத்துவ மையம் நடத்துவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த மையத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவர்கள் மூலம் உடல் வெப்பநிலை, கபசுரக் குடிநீர், சித்த மருந்துகள், ஆக்சிஜன் அளவு பரிசோதனை, 5 மூலிகைகள் கொண்ட மூலிகை குடிநீர், இஞ்சிச்சாறு தேன் கலவை போன்றவை வழங்கப்படுகின்றது. மேலும் மையத்தில் மூலிகை தூப புகை போடப்பட்டு நோயாளிகளை சுவாசிக்க வைத்தல் மற்றும் நோயாளிகளுக்கு வாசனையற்ற நிலையை போக்க ஓமபொடி வழங்கப்படுகின்றது. இதனை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவன் அருள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.