கேரள மாநிலத்திற்கு கடத்துவதற்கு மறைத்து வைத்திருந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் செய்யது அலி ஆகியோர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் விசாரணைக்கு வாணியங்குடி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் மறைவு இடத்தில் தார்பாய் வைத்து மூடியிருந்ததை அதிகாரிகள் சோதனை செய்ததில் கேரள மாநிலத்திற்கு கடத்துவதற்கு 60 மூட்டைகளில் 3¼ டன் அரிசி வைத்திருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் மீட்டு உடையார்விளை அரசு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து நித்திரவிளை காவல்துறையினர் இரயுமந்துறை மீனவ கிராமத்தில் ரோந்து பணிக்கு சென்ற போது ஒரு ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட சுமார் 250 கிலோ அரிசியை கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அந்த அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அரிசி மூட்டைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.