நெல்லையில் கண்டியப்பேரி பகுதியில் அமையவுள்ள இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையின் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
நெல்லை கண்டியப்பேரி பகுதியில் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையின் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 5329.54 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்படும் மருத்துவமனை ஜப்பான் நிதியுதவியுடன் 28 கோடியே 90 லட்சம் மதிப்பளவில் கட்டப்படவுள்ளது. இந்த கட்டுமான பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர் அருள்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தாசில்தார் பகவதி பெருமாள் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 3 தளங்களுடன் கட்டப்படவுள்ள இந்த மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் அமைய உள்ளன. மேலும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனியாக பொது மருத்துவமனை பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக தாய், சேய் பிரிவும், தீவிர சிகிச்சை பிரிவும் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.