ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியால் ஆரம்பிக்கப்பட்ட ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பினை நீதிமன்றம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி ( 44 ) “ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பு” என்ற அமைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக உருவாக்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த வருடம் நோவிசோக் என்ற வேதிபொருள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற நவால்னி தொடர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கு காரணமாக கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவிற்கு வந்த நவால்னியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே நவால்னியால் தொடங்கப்பட்ட “ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பு” பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல புகார்கள் எழுந்ததையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை விசாரணை செய்த ரஷ்ய நீதிமன்றம் நவால்னியின் “ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பு” என்ற அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
மேலும் அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அமைப்புகள் செயல்பட்டு வருவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள நவால்னியின் அமைப்பிற்கு நிதி உதவி வழங்குபவர்கள், அமைப்பின் தகவல்களை பகிர்பவர்கள், அமைப்பில் செயல்பட்டு வரும் ஆர்வலர்கள் என அனைவரும் நீண்ட கால சிறை தண்டனை மற்றும் சட்ட ரீதியான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.