கூரை அமைத்தபோது தவறிக் கீழே விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் ஜெயகாந்தன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயகாந்தன் அதே பகுதியில் வசிக்கும் சுரேந்திரன் என்பவரின் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயகாந்தன் தவறிக் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெயகாந்தன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ஜெயகாந்தனின் தந்தையான சொக்கலிங்கம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெயகாந்தனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.