காவல் நிலையத்தில் மின்கசிவால் 50-க்கும் மேற்பட்ட கிரைண்டர்கள் எரிந்து நாசமாகி விட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே தற்காலிகமாக காடம்பாடி பகுதியில் ஓட்டு கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில் உள்ள மற்றொரு அறையில் அரசு திட்டத்தின் கீழ் விலையில்லா கிரைண்டர்கள், பயனில்லாத பழைய பொருட்கள் மற்றும் கொரோனா ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவர்களின் இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை அங்கு வைத்துள்ளனர். இதனை அடுத்து நேற்று காலை 10 மணி அளவில் காவல் நிலையத்தில் இருந்து புகை வெளியே வந்தது. பின்னர் காவல் நிலையம் காட்டுத்தீ போல் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை வெகுவாக அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கிரைண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமாகிவிட்டது. ஆனால் தீயணைப்பு துறையினர் தீ பரவாமல் உடனடியாக அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக இரு சக்கர வாகனங்கள் தீயிலிருந்து தப்பிவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸ் சூப்பிரண்ட் சுப்ரமணியன் அங்கு விரைந்து சென்று நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.