கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஜோதியும், கட்டிட மேஸ்திரியான முத்தையா என்பவரும் கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் இருக்கும் ஒரு கடையில் கருவாடு வாங்கியுள்ளனர். அதன்பிறகு ஜோதி கடை காரரிடம் 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ஆனால் அந்த நோட்டின் மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக அவ்வழியாக சென்ற மாரியப்பன் என்ற காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முத்தையா மற்றும் ஜோதி ஆகிய இருவரையும் காவல் அதிகாரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் பென்னாகரம் பகுதியில் வசிக்கும் பூசாரியான முருகன் என்பவர் இந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்ததாக இருவரும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் முருகனின் வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது அங்கு 48 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளும், இரண்டு கலர் பிரிண்டர்களும் இருந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன், முத்தையா, ஜோதி ஆகிய 3 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த கலர் பிரிண்டர் மற்றும் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.