தேனி மாவட்டத்தில் வீடு தகராறு காரணமாக முதியவரை அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடுத்துள்ள வடுகப்பட்டியில் கோவிந்தராஜ்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டுக்கு அருகே தண்டபாணி(31) என்பவர் புதிதாக வீடு கட்டி வருகின்ற நிலையில் கோவிந்தராஜனுக்கும், தண்டபாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் 29ஆம் தேதி தண்டபாணி புதிதாக கட்டும் வீட்டில் சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக சிமெண்ட் கலவை கோவிந்தராஜன் வீட்டிற்குள் விழுந்துள்ளது.
இதனால் கோவிந்தராஜன் தண்டபாணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு கோவிந்தராஜனை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தண்டபாணி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.