“கொரோனா தடுப்பூசி” போட்டுக்கொண்டால் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று நிறுவனங்கள் அறிவித்ததால், பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்றின் பிடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 75 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சீனாவிலிருக்கும் ஹாங்காங்கில் 15% விழுக்காடு பொதுமக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார்கள்.
இதனால் அங்கு செயல்படும் பெரு நிறுவனங்களின் உதவியை ஹாங்காங் நிர்வாகம் நாடியுள்ளது. இதன் விளைவாக SUN HUNG KAI நிறுவனம் ஒரு புதுவித அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களுக்கெல்லாம் ஐபோன் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இதுபோன்று லீ ஷா கீ ஹெண்டர்சன் நிறுவனம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தங்க கட்டிகளை கொடுப்பதாகவும், குட்மேன் நிறுவனம் டெஸ்லா காரை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இவ்வாறு பெருநிறுவனங்களின் பலவித அறிவிப்புகளை வெளியிட்டதையடுத்து பொதுமக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்துள்ளது