ஜனநாயக படி நடந்தால் தவறா? அது தேசவிரோதமா ? என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் , காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற 14 கட்சிகளுடன் இணைந்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஜனநாயகத்தை காப்பாற்ற நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் திசை திருப்பி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஜனநாயக படி நடந்தால் அது தவறா? அது தேசவிரோதமா ? மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்குக்கின்றது. தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் கொடுக்காமல், விவசாயத்தை அழிக்க கூடிய திட்டங்களை கொண்டு வந்து, நீட் தேர்வை திணித்து பழிவாங்குகின்றது. அதிமுக ஆட்சி அதை அடி பணிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படும் போது குரல் கொடுக்கத் தான் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை தொடங்கினார்.
அகில இந்திய அளவுக்கு எது சரியான அரசியல் என்று அதை நோக்கி தான் நாங்கள் தொடர்ந்து செல்கின்றோம். சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன பயன் என்று சிலர் கேட்கிறார்கள். பெரியார் எந்தப் போராட்டமாக இருந்தாலும் வெற்றி பெற்ற்றோம், தோல்வி அடைந்தோம் என்பதல்ல விஷயம் நாம் நம்முடைய கடமையை செய்திருக்கிறோமா என்பது தான் முக்கியம் என்பார். அதை தான் திமுக செய்திருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.