Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகள் இல்லை…. ரொம்ப கஷ்டப்படுறோம்…. எங்களுக்கு நிவாரணம் கொடுக்க கோரிக்கை….!!

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பூம்பூம் மாடுகளை வைத்து தொழில் நடத்தி வந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை வருகின்ற 14ஆம் தேதி வரை அறிவித்து இருக்கின்றது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் பூம்பூம் மாடுகளை வைத்து தொழில் நடத்திய தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாடுகளை வைத்து ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறி சொல்லி வேடிக்கை காட்டி யாசகம் பெற்று வருவார்கள்.

இதனையடுத்து பூம்பூம் மாடுகளை வைத்து ஆண்கள் வித்தை காட்டுவதும், பெண்கள் ஊசிமணி, வளையல், தோடு, திருஷ்டி கயிறு போன்ற பொருட்களை ஊர் ஊராகச் சென்று கோவில் விழாக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் விற்பனை செய்தும் வாழ்க்கை தரத்தை நடத்தி வந்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இவர்களுக்கு மாடு இல்லாமல் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பூம் பூம் மாட்டுக்காரர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்து தவிக்கின்றனர். மேலும் வருமானம் இன்றி, உணவின்றி சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். எனவே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பூம் பூம் மாடுகளை வைத்து தொழில் நடத்தி வந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |