ரயிலில் மதுபானம் கடத்திய உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து செல்லும் ரயில்களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மைசூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னையை நோக்கிச் செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டையில் நின்றபோது அதில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகர், ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் ஏறி சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் ஆடுதொட்டி நரசிம்மநகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் 45 மதுபான பாக்கெட்டுகள், 5 மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை ரயிலில் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் மது பாக்கெட்டுகள் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் படி சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவரிடம் இருந்த 35 மதுபான பாக்கெட்டுகள், 3 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனைதொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி முத்துவிடம் ரயில்வே காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட சதீஷ்குமார், ஞானப்பிரகாசம் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.