தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கபட்ட நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, உயர் கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. இதற்காக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 14ஆம் தேதி பள்ளியில் இருக்க வேண்டும். மேலும் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்த,பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த பெற்றோர்களுக்கு வீடு வீடாகச் சென்று எடுத்துரைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.