13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா முன்னிலையில் 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இலவசமாக தட்டுப்பாடுகளின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களை அதிக அளவில் பணியில் நியமிக்க பட வேண்டும் எனவும், மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அரசுக்கு வருமான வரிச் செலுத்தாத குடும்பங்களுக்கு மாதம் 7500 ரூபாய் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தின் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பல தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டு பேசியுள்ளனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் சரணவனிடம் மனு அளித்து தமிழக அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.