இத்தாலியை சேர்ந்த இளம் தாயார் ஒருவர் சுமார் 10 மாதங்களாக கோமாவில் இருந்து வரும் நிலையில் திடீரென்று கண்விழித்து பேசிய சம்பவம் அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியை சேர்ந்த கிறிஸ்ட்டினா ரோஸி ( 37 ) எனும் இளம்பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்து வந்த அவருக்கு பெண் குழந்தை ஒன்று அறுவை சிகிச்சை முறையில் பிறந்துள்ளது.
கிறிஸ்டினா ரோஸி 10 மாதங்களாக கோமாவில் இருந்து வரும் நிலையில் திடீரென கண்விழித்து மம்மா என்று பேசியுள்ளார். இந்த சம்பவம் அவருடைய கணவருக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, இதுவரை கடந்து வந்த துயரங்களை நொடிப்பொழுதில் மறைக்கும் விதமாக உணர்ச்சிவசப்பட செய்துள்ளது. இத்தாலியில் சிகிச்சை பெற்று வந்த ரோஸி ஆஸ்திரேலியாவில் சிறப்பு சிகிச்சைக்காக கடந்த ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதுவரை 148,000 பவுண்டுகள் ரோஸியின் சிகிச்சைக்காக பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஸி தற்போது படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் அவருடைய கணவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் அந்த தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தை பிரசவத்தின்போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல மாதங்களாக மருத்துவமனையிலேயே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..