மழைக்காலங்களில் மிக்ஸி, டி.விகளை இயக்க வேண்டாம் என மின்வாரிய துறை அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தற்போது பெய்து வரும் பருவமழை நேரத்தில் மின்மாற்றி, மின் கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்வதை பொதுமக்கள் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் அறுந்துவிழும் மின்சார கம்பி அருகில் யாரும் செல்லக் கூடாது என்றும் அதுகுறித்து உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து சரி செய்யும் வரை மின்கம்பியை தொடாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதன் பின் இடி, மின்னலின் போது மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசியை பொதுமக்கள் உபயோகிக்கக்கூடாது என்றும் சுவர்களில் ஈரத்தினால் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வீடுகளில் கிரில் ஜன்னல்களில் இரும்புக் கம்பிகளைக் கட்டி துணி காயப்போட வேண்டாம் என்றும் திருமதி. குருவம்மாள் கூறியுள்ளார்.
மேலும் கேபிள் டி.வியின் ஒயர்களை மின்கம்பிகளில் கட்டி எடுத்துச் செல்வதால் மழைக்காலங்களில் ஒயரில் பழுதான பாகங்கள் வழியாக மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் அதை தவிர்க்க வேண்டும் என்று ஆபரேட்டர்களுக்கு திருமதி. குருவம்மாள் வலியுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டின் மேற்கூரையில் தண்ணீர் தேங்குவதால் சுவர்களில் தண்ணீர் கசிந்து ஈரம் ஏற்பட்டு மின் கசிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் சுவிட்ச்போர்டு மற்றும் ஈரமான சுவர்களை பொதுமக்கள் தொடக்கூடாது என்றும் மின்சாரத்தை துண்டித்து தண்ணீர் கசிவையும், மின் கசிவையும் சரிசெய்ய வேண்டும் என்றும் பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.