மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குவைத் நாட்டின் பிரதமரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்த குவைத் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அகமது நாசர் அல்முகமது அல்சபாவின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் காலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குவைத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உதவி வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் ரசாக் அல்கலீபா விமான நிலையத்தில் வைத்து வரவேற்பு அளித்துள்ளார்.
மேலும் இந்திய அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் ஆகியோரும் அங்கு வந்துள்ளனர். அதன் பிறகு இந்தியா-குவைத் நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவின் அறுபதாவது நிறைவு ஆண்டை முன்னிட்டு குவைத் பிரதமர் ஷேக் சபா காலித் அல்ஹமாத் அல்சபாவை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்த பயணத்தின் போது மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை குவைத் ஆட்சியாளர் ஷேக் நவாப் அல்அகமது அல்ஜபார் அல்சபாவை சந்தித்து ஒப்படைக்க உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்திக்கவும், குவைத் நாட்டில் நடைபெறும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவும் உள்ளார்.