தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். தமிழ்நாட்டின் முதல்வரான பிறகு முதல் முறையாக மோடியை சந்திக்கும் போது 30க்கும் மேற்பட்ட கோரிக்கை அடங்கிய மனுவை ஸ்டாலின் வழங்க உள்ளார். பிரதமரை சந்திக்கும் போது பேசப்பட வேண்டிய கருத்துக்கள் குறித்து அரசு உயர் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.