சட்ட விரோதமாக மது பாட்டில் மற்றும் சாராயம் விற்பனை செய்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது தர்மபுரியில் வசிக்கும் சின்னசாமி, அருள் உள்ளிட்ட 13 நபர்களின் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 13 பேரையும் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடமிருந்த 915 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.