காயமடைந்த யானையை பிடித்து ஒரு வாரத்திற்குள் முதுமலைக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிகிறது. இந்நிலையில் காயத்துடன் சுற்றி அலையும் இந்த யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. எனவே காயத்தை குணப்படுத்தி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன் படி வனத்துறையினர் இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்து விட்டது.
இந்நிலையில் அந்த யானை வலி தாங்க முடியாமல் நீண்டநேரம் அப்பகுதியில் இருக்கும் குட்டை தண்ணீரில் நின்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் இந்த யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை பிடித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் முதுமலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.