அறந்தாங்கி அருகில் பெற்றோரை இழந்து தவிக்கும் 4 சிறுவர்கள் அரசு உதவியை எதிர்பார்த்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவற்றக்குடி ஊராட்சி ஆதிதிராவிடர் குடியிருப்பில் ஆனந்தன்- மகமாயி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு கபிலன், மதுபாலன், மதுஸ்டன், மதுபிரியன் ஆகிய 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் மதுபாலன், மதுஸ்டன், மது பிரியன் ஆகியோர் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் ஆவர். இந்நிலையில் கட்டிட வேலையில் பணி புரிந்து வந்த ஆனந்தன் கடந்த 201 ஆம் ஆண்டு மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து மகமாயி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து 4 மகன்களையும் பூவற்றக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்து குடும்ப செலவுகளை சமாளித்து வந்துள்ளார்.
எனவே மகமாயின் மூத்த மகன் கபிலன் தற்போது 12-ம் வகுப்பும், மற்ற 3 பேரும் எட்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் மகமாயிக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு கடந்த 17-ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அனாதையாக நின்ற 4 மகன்களுக்கு அவரது உறவினர்கள் உணவு கொடுத்து வந்துள்ளனர். ஆனால் உறவினர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.
இதனையடுத்து மகமாயின் மூத்த மகன் கபிலன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அவரது சகோதரர்களுக்கு உணவு சமைத்து வழங்கி வந்துள்ளார். ஆனால் உணவுப் பொருட்கள் சில நாட்களே இருப்பதனால் அவர்கள் உணவுக்குத் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் பெற்றோரை இழந்து தவிப்பதனால் 4 பேரும் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் 4 பேரும் தமிழக அரசு உதவி செய்து கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.