நடிகர் அஜித்தின் வலிமை படத்திலிருந்து சில நடிகர்கள் விலகியுள்ளதாக இயக்குனர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் ஹெச்.வினோத் வலிமை படத்தில் இருந்து சில நடிகர்கள் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இயக்குனர் ஹெச்.வினோத் ‘வலிமை படத்தின் ஒரு சில காட்சிகளை சீனியர் நடிகர்களை வைத்து படமாக்கினோம். அதன் தொடர்ச்சியாக அந்த நடிகர்களை படப்பிடிப்புக்கு அழைத்த போது கொரோனா தொற்று பயம் காரணமாக அவர்கள் படப்பிடிப்பிற்கு வர முடியாது என கூறிவிட்டனர். தற்போது அந்த நடிகர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது’ என கூறியுள்ளார்.