ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜூன்-19 ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பின்னர், மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.