கடன் தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி இதுகுறித்து பேசியபோது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வியாபாரம், தொழில் செய்து வருகின்றனர். எனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதனால் கடன் பெற்றவர்கள் தங்களது தொகையை திரும்ப செலுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடன் தவணை தொகையை திரும்ப தரும்படி ஒருசில வங்கிகள், நிதி நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுவை கட்டாயப்படுத்தி வருவதாக புகார் வந்துள்ளது.
இதனையடுத்து கடன் தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்தும் வங்கிகள், நிதி நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று செலுத்தாத கடன் தொகைக்கும் கூடுதல் வட்டி விதிக்கக் கூடாது என்றும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி கடன் வசூல் செய்தால் 0416-2255765 என்ற தொலைபேசி எண்ணிற்கும் அல்லது 9629361193 என்ற செல்போன் எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் செந்தில்குமரன், முன்னோடி வங்கி மேலாளர் ஜான்தியோடசியஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை பொது மேலாளர் தூயவன், நுண் நிதி நிறுவன ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.