“கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால்”, அதிலிருந்த வேதிப்பொருட்கள் கடலில் கலந்து மோசமான சுற்றுச்சூழல் மாசை உண்டாக்கியதால் இலங்கை அரசாங்கம் அட்டார்னி ஜெனரல் மூலம் சுமார் 40 மில்லியன் டாலர்களை கப்பல் உரிமையாளர்களிடம் கேட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த “எக்ஸ்பிரஸ் பியர்ல்” என்னும் கப்பல் நைட்ரிக் அமிலம் மற்றும் வேதிப் பொருட்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு குஜராத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் வேதிப்பொருட்களை ஏற்றி கொண்டு சென்ற “எக்ஸ்பிரஸ் பியர்ல்” கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு அருகே திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனையடுத்து கப்பலில் இருந்த 25 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். ஆனால் கப்பல் முழுவதும் சேதமடைந்து பாதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்ததால், அதனை அப்புறப்படுத்த முடியவில்லை. அதனால் கப்பலில் இருந்த வேதிப்பொருட்கள் முழுவதும் கடலில் கலந்து மிகவும் மோசமான சூழ்நிலையை உண்டாக்கியது.
மேலும் விபத்து நடந்த அந்தப் பகுதியில் மீன் பிடிப்பதற்கும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இது தான் இலங்கை வரலாற்றிலேயே மிகவும் மோசமான சுற்றுச்சூழல் மாசை உண்டாக்கிய சம்பவம் என்பதால் அட்டார்னி ஜெனரல் மூலம் சுமார் 40 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 300 கோடி ரூபாயை இடைக்கால இழப்பீடு தொகையாக வழங்குமாறு கப்பல் உரிமையாளர்களிடம் அந்நாட்டு அரசாங்கம் கேட்டுள்ளது.