தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் எக்ஸ்னோரோ நிறுவனம் சார்பாக வழங்கப்பட்ட 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 573 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது வரை 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதே அரசின் திட்டம் என்றும், எனவே மக்கள் யாரும் தடுப்பூசி மையங்களுக்கு முண்டியடித்துக் கொண்டு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.