மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக குவைத் சென்றுள்ள நிலையில் இந்தியா-குவைத் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று மூன்று நாள் பயணமாக குவைத்துக்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் ஷேக் சபா அல் கலீத் அல் ஹமத் அல்சபாவை நேரில் சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், குவைத் வெளியுறவு மந்திரி ஷேக் அகமது நாசர் அல்சபாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது பிராந்திய முன்னேற்றங்கள், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இருவரும் கலந்து ஆலோசித்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி தொடர்பான பிரச்சினைகள், பயணக் கட்டுப்பாடுகள் என இரு நாட்டு குடிமக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும் இருவரும் கலந்து ஆலோசித்துள்ளனர். அதன் பிறகு இரு நாடுகளுக்கிடையே குவைத்தில் வீட்டில் வேலை செய்து வரும் இந்திய தொழிலாளர்களுக்கு முறையான சட்ட பாதுகாப்பு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.