குட்டையில் குளிக்கச் சென்ற இளம்பெண் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள தொரப்பாடி காந்தி தெருவில் நவ்சாத் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மூத்த மகள் நசியா 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நசியா தனது தங்கை, தம்பிகளுடன் சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நசியா குளித்துக் கொண்டிருக்கும்போது நீச்சல் தெரியாமல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனைக் கண்ட சிலர் நசியாவை மீட்க முடியாத நிலையில் அரியூர் காவல் நிலையம் மற்றும் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 5 மணி நேரம் தேடிப்பார்த்தும் நசியாவை மீட்க முடியவில்லை.
இதனையடுத்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் காலை 8 மணி அளவில் கல்குவாரி குட்டையில் இறங்கி நசியாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சுமார் 2 மணி நேரம் கழித்து நசியா சடலமாக குட்டையில் இருந்து மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நசியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.