பாகிஸ்தானில் தொடர்ந்து வீசி வரும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் நேற்று இரவும், இன்றும் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என்று ஏற்கனவே பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மாகாண பேரிடர் மேலாண்மை கழகம், பலத்த காற்றுடன் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த கன மழையால் சுமார் 8 வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 5 பேர் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கனமழை காரணமாக ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சித்ரா மாவட்டத்தில் உள்ள முக்கியமான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.