தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதால் கொரோனா தொற்று குறைந்து வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திற்கு 8 ஆயிரத்து 750 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 750 கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்தது. இதனையடுத்து திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற 45 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 18 வயதிற்கு மேல் இருப்பவர்களும் 45 வயதிற்கு மேல் இருப்பவர்களும் தடுப்பு செலுத்துவதற்கு ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்தி கொண்டனர்.
அதன்பின் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் சிவன் அருள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சிவன் அருள் கூறியபோது மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்ததே ஆகும். எனவே தற்போது மாவட்டத்திற்கு வந்த 9 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் 45 சிறப்பு முகாம்களில் வைத்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது. இதனால் ஓரிரு நாட்களில் தடுப்பூசிகள் வந்ததும் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். அப்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.