‘பாபநாசம் 2’ படத்தில் நடிகை கவுதமிக்கு பதில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
மலையாள திரையுலகில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷ்யம்-2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தை இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல் தமிழிலும் பாபநாசம் 2 உருவாக இருப்பதாகவும் இதில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாபநாசம் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும் அவருக்கு பதில் மீனாவை வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன், மீனா இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ‘பாபநாசம் 2’ படத்திற்காக இவர்கள் இணைவார்களா? என்பது விரைவில் தெரியவரும்.