அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு போர்வெல் நிறுவனத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் முன்பு நிறுத்திவிட்டு காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது வண்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோன்று மார்த்தாண்டம் அருகில் உள்ள புல்லாணியைச் சேர்ந்த ஆன்றோ லிபின் என்பவரும் அவருடைய மோட்டார் சைக்கிளை வெட்டு மணியில் நிறுத்தி வைத்திருந்த போது யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர். இதற்கிடையில் மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்த ஜாண் தயா என்பவர் தனது மோட்டார் சைக்கிளை மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சிகிச்சை பெறும் உறவினரை பார்க்க சென்றுள்ளார். அதன்பின் சிறிது நேரம் கழித்து ஜாண் தயா வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிளை ஒரு வாலிபர் திருடிச் செல்ல முயன்றபோது அவர் சத்தமிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வாலிபரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அந்த வாலிபரிடம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தியதில், அவர் கேரள மாநிலம் பொழியூர் தெற்கு கொல்லங்கோடு மீனவர் காலனியை சேர்ந்த டேனியல் என்பதும் பம்மம் போர்வெல் நிறுவன ஊழியர் ரஞ்சித்குமார் மற்றும் புல்லாணியை சேர்ந்த ஆன்றோ லிபின் ஆகியோரின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டேனியலை கைது செய்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.