காரில் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் சிலர் வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு மது கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மல்லூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் 1,020 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சோம்நாத் புரம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுராத் மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி பூபேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ஓசூரில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு மது பாட்டில்களை கடத்திச் செல்ல முயன்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் மஞ்சுராத், பூபேந்திரன் ஆகிய இருவரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி கைது செய்து காரையும் பறிமுதல் செய்துள்ளார்.