சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வேகத்தடைகளுக்கு பெயிண்ட் அடித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நா.மூ.சுங்கத்தில் இருந்து உடுமலைக்கு செல்லும் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நேரிடும். இதனால் அதிகாரிகள் சாலையை விரிவுபடுத்தும் பணியை செய்துள்ளனர். இந்நிலையில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் வளைவான பகுதி, முக்கிய சாலைகள், சந்திப்பு என அறிந்து கொள்ள வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் வேகத்தடையின் மீது பூசபடவில்லை. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது திடீரென விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, அந்த சாலையில் வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. எனவே அதனை அடையாளப்படுத்தும் வகையில் அதிகாரிகள் அதன் மீது வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைந்து, அறிவிப்பு பலகையும் அதன் அருகில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பொது மக்கள் தாமாக முன்வந்து வீட்டிலிருந்தே வெள்ளை பெயிண்டை எடுத்து வேகத்தடையின் மீது பூசியுள்ளனர். இதனால் அந்த சாலையில் செல்லும்போது விபத்துகளை தவிர்க்க முடியும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.