முன்விரோதம் காரணத்தினால் வாலிபனை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழந்தண்டலம் பஜனை கோவில் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் கல் அரைக்கும் தொழிற்சாலை நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர் தண்டபாணியுடன் தொழிற்சாலையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் தனசேகரை பார்த்து ஓடி வந்துள்ளனர். இதனைப் பார்த்த தனசேகர் மற்றும் தண்டபாணியும் அவர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடி உள்ளனர்.
இதனையடுத்து மர்மநபர்கள் தனசேகரை விடாமல் துரத்திக் கொண்டு சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திய போது முன்விரோதம் காரணத்தால் ரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனசேகர் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்தக் கொலைக்கு பழிவாங்கும் விதத்தில் தற்போது தனசேகரை கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.