இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த பல் டாக்டர் தி.மு.க எம்.பி பெயரில் போலியான பாஸ் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இருக்கும் புதரை ஓட்டி கடந்த 10-ஆம் தேதி இரவு சொகுசு கார் ஒன்று நின்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறை அதிகாரி அந்த காரில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் காரில் இருந்த இளம்பெண் உடனடியாக கீழே இறங்கி தனது ஸ்கூட்டியில் தப்பி சென்றுள்ளார். அதன் பின் அந்த காரில் இருந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஷியாம் கண்ணன் என்பதும், பல் டாக்டராக இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் தான் தி.மு.க எம்.பி ஒருவருக்கு நெருக்கமானவர் என்றும், எம்.பி-யின் பெயரில் பாஸ் ஒன்றை காரில் ஒட்டியிருப்பதையும் காவல் அதிகாரியிடம் காண்பித்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட அந்த தி.மு.க எம்.பி-யை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரித்த போது தான் இது போல் யாருக்கும் கார் பாஸ் எடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். இதனைதொடர்ந்து ஷியாம் கண்ணனிடம் நடத்திய விசாரணையில் சுங்க கட்டணத்தை தவிர்க்க ராஜகோபால் என்பவரிடமிருந்து இந்த எம்.பி பாஸை வாங்கியுள்ளதாகவும், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கவும் இதனை பயன்படுத்துவதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பின் பள்ளிக்கரணை காவல் துறையினர் ஷியாம் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் ராஜகோபால் என்பவர் யார் என்றும், அனுமதி இல்லாமல் தி.மு.க எம்.பி-யின் பெயரில் போலியான பாஸ் எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்ற விவரம் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.