ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் ஊசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து ஆண்டிப்பட்டி, எலவடை, தொட்டம்பட்டி, சாமண்ட அள்ளி, தொப்பம்பட்டி, வகுத்தானூர், சென்னம்பட்டி, மொரப்பூர் போன்ற சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அங்கே தடுப்பூசி போடுவதற்காக கூட்டமாக குவிந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர்.
மேலும் 200 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வந்ததால் முதலில் வந்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதற்குப் பின் வந்த பொதுமக்களிடம் மருத்துவர்கள் தடுப்பூசி மருந்து இல்லை என கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அதிகாலையிலிருந்து வெயிலில் காத்திருந்த பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி போடாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றுள்ளனர்.